மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என்ற மத்திய அரசின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் விஜய், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என்ற மத்திய நீர்வளத்துறை இணை மந்திரியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் விஜய், இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு, கீழ்ப்படுகை மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறத் தேவையில்லை என மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி ராஜ் பூஷன் அளித்த பதில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிலை திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் விஜய், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முரணாகவும் ஏமாற்றமளிக்கும் வகையிலும் மத்திய நீர்வளத்துறை இணை மந்திரியின் கருத்து அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காவிரி என்பது வெறும் நீர் ஆதாரம் மட்டுமல்ல, அது தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது என்பதை அவர் தனது கடிதத்தில் நினைவுபடுத்தியுள்ளார். கடைமடை மாநிலத்தின் அனுமதியின்றி, நதியின் மேல் பகுதியில் உள்ள மாநிலம் தன்னிச்சையாக அணையை கட்ட முடியாது என்பது விதியாகும்.
பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதியும் மத்திய அரசு வழங்கக்கூடாது. கீழ்ப்படுகை மாநிலங்களுக்கு வரும் நீரின் அளவை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலின்றி செயல்படுத்த முடியாது" என முதல்-அமைச்சர் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய இணை மந்திரி தனது பதிலை உடனடியாக திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய காவிரி நீரின் அளவு மற்றும் நீர்வரத்து சீராக இருப்பதை உறுதி செய்ய முடியாது என்ற அபாயம் உள்ளது. எனவே, இத்திட்டம் குறித்து முழுமையான தொழில்நுட்ப மற்றும் சட்டப்பூர்வ ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே எந்தவொரு முடிவும் எடுக்கப்பட வேண்டும் எனவும், தமிழ்நாட்டின் முறையான ஒப்புதலின்றி கட்டுமானப் பணிகளை தொடங்க அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் நதிநீர் உரிமையை நிலைநாட்டும் வகையில் முதல்-அமைச்சர் விஜய் எடுத்துள்ள இந்த உறுதியான நிலைப்பாடு, மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது. பிரதமரின் தலையீட்டை அடுத்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றுமா என்பதைப் பொறுத்தே இந்த நதிநீர் விவகாரத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும்.





