புதிய தொழில் பூங்காக்கள் உள்ளிட்ட மெகா திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும்போது எழும் மக்கள் எதிர்ப்புகளைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகளைப் பொறுமையாகச் செயல்பட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை: புதிய தொழில் பூங்காக்கள் மற்றும் அதிக நிலம் தேவைப்படும் பிற உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் அவசரம் காட்ட வேண்டாம் என்று தொழில் துறை அதிகாரிகளுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகப் பல்வேறு பிரமாண்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகப் பொதுமக்களிடம் இருந்து நிலங்களைக் கையகப்படுத்தும்போது பல்வேறு இடங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இத்தகைய சூழலில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிய விமான நிலையத் திட்டம் மற்றும் அறிவுசார் வழித்தடம், செங்கல்பட்டில் சர்வதேச நகரம் உள்ளிட்ட பல்வேறு மெகா திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக, பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு மொத்தம் 5,300 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் தனியாருக்குச் சொந்தமான 3,000 ஏக்கர் நிலங்களில், இதுவரை 1,500 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, பரந்தூர் விமான நிலையத் திட்டம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 'சிப்காட்' (SIPCOT) தொழில் பூங்காக்கள் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றபோது, அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்து பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. தற்போதைய ஆட்சி மாற்ற சூழ்நிலைகளால், பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கான எஞ்சிய நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள சர்வதேச நகரம் மற்றும் ஓசூர் அறிவுசார் வழித்தடம் ஆகிய பெரிய திட்டங்களுக்கும் இதுவரை நிலம் கையகப்படுத்தப்படவில்லை. இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக அரசுத் தரப்பில் நடைபெற்ற சமீபத்திய ஆலோசனைக் கூட்டத்தில், "புதிய தொழில் பூங்காக்கள் அமைப்பது உட்பட அதிக நிலம் தேவைப்படும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அவசரப்பட வேண்டாம்; நிலைமையைப் பொறுமையாகப் பார்த்துக் கொள்ளலாம்" என அரசுத் தரப்பில் அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் எதிர்ப்புகளைத் தவிர்த்து, சுமுகமான முறையில் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கவே தமிழக அரசு இந்த நிதானமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அரசின் இந்த உத்தரவின் மூலம், பெரிய அளவிலான உள்கட்டமைப்பு மற்றும் தொழில் திட்டங்களில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அரசின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







